“அம்மா நீங்கள் வரவே மாட்டீர்களா ?”


391305_391474050919842_678820821_nஅன்பின் அம்மாவுக்கு,
சுவாசிக்கக் காற்றிருக்கிறது. உண்ண ஒருவேளை சோறு கிடைக்கிறது. துன்பங்களின் மத்தியிலும் உங்கள் மடியில் சாய்ந்துறங்கிய நிம்மதியான நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் நலமாயிருக்கிறீர்களா? உங்களின் நலத்திற்கு என்றும் குறைவரக்கூடாது என்பதுதான் எனது முதல் பிரார்த்தனையும் வேண்டுதலும். நம் தெய்வம் உங்களின் நலன் காக்கட்டும்.

நிற்க:

நீங்கள் குவைத் சென்று ஐந்து வருடங்கள் கழிந்துவிட்டன. இரண்டு வருடங்களில் வருவதாக சொல்லிச் சென்றீர்கள். ஒன்றும் அறியாத எட்டுவயது சிறுமியாய் இருந்தபோது நீங்கள், கடைசியாய் தந்த அன்பு முத்தம் இன்னும் இனிக்கிறது அம்மா. ஆனாலும் பல விடயங்களை பரிமாறி துன்பங்களைச் சொல்லி அழ என் அருகில் அம்மா இல்லையென்று நித்தமும் அழுது வாடுகிறேன்.

அப்பா சரியாக வீட்டுக்கு வருவதேயில்லை. அப்படி வந்தாலும் குடித்துவிட்டுத்தான் வருகிறார். நானும் தம்பியும் உயிரோடு இருக்கிறோமா இல்லையா என்று கூட அவர் கவலைப்படுவதில்லை. நீங்கள் பணம் அனுப்புகிறீர்களோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் கிடைக்கும் பணத்தில் எல்லாம் அப்பா கசிப்பு குடிக்கிறார். நேற்று அவர் வீட்டுக்கே வரவில்லை.

காலையில் வீட்டு வாசலில் விழுந்து கிடந்தார். அவருக்கருகில் கிழிந்த தாளில் எழுதப்பட்ட உங்களுடைய விலாசம் இருந்தது. இது உண்மையான விலாசமோ எனக்குத் தெரியாது. ஆனாலும் எழுதுகிறேன். வெளிநாட்டில் தங்களுடைய அம்மா வேலை செய்ய, என்னைப்போன்ற எத்தனை குழந்தைகள் இந்தத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்காறார்களோ தெரியவில்லை.

நீங்கள் சொல்லிவிட்டுச் சென்றது போலவே நான் இன்னும் பாடசாலைக்குச் சென்றுகொண்டுதான் இருக்கிறேன். முடிந்தளவு படிக்கிறேன். தம்பி பாடசாலைக்குச் செல்வதில்லை. பார்ப்பார் யாருமின்றி அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவனுடைய எதிர்காலத்தை நினைத்தால்தான் எனக்குப் பயமாக இருக்கிறது.

பட்டினி கிடக்கும் நிலை

நான் பாடசாலையிலிருந்து வந்தவுடன், பெரிய ஐயாவின் வீட்டுக்கு வேலை செய்யச் சென்றுவிடுவேன். அடிக்காத குறையாக என்னிடம் வேலை வாங்குகிறார்கள். ஐயா ஒரு நாளைக்கு 20 ரூபா தருவார். அங்கேயே எனக்கும் தம்பிக்கும் சாப்பாடும் கிடைக்கும். அந்தப் பணத்தை வைத்துத்தான் என்னுடைய தேவைகளை நிறைவேற்றுகிறேன். எனக்கு சமைக்கத் தெரியாது. அம்மா, ஐயா வீட்டில் சாப்பாடு கிடைக்காவிட்டால் பட்டினியாகத்தான் இருப்போம்.

அம்மா,
உண்மையைச் சொன்னால் நான் வயதுக்கு வந்தது கூட எனக்குத் தெரியாது. அதையெல்லாம் சொல்லித்தரத்தான் நீங்கள் அருகில் இல்லையே? எனக்கென உடுதுணிகள் வாங்கியதுகூட இல்லை. அப்பாவுடன் வரும் அவருடைய நண்பர்கள்கூட என்னை குரூரப் பார்வையால் தான் பார்க்கிறார்கள். எனக்குப் பயமாக இருக்கும். வீட்டில் தனியாக இருக்கவே பிடிக்கவில்லை.

இந்த வருடம் நான் ஒன்பதாம் ஆண்டு. ஆனாலும் இதுவரை புத்தகங்கள் வாங்கவில்லை. நண்பிகள் கொடுக்கும் பழைய கொப்பிகளில் தான் எழுதி வருகிறேன். இருந்தாலும் நான் எப்போதும் வகுப்பில் முதலாம் பிள்ளைதான். அதனால்தான் இந்தளவுக்கு உங்களுக்கு கடிதம் எழுத முடிகிறது. இந்தக் கடிதம் உங்கள் கையில் கிடைத்தவுடன் இலங்கைக்கு வர முயற்சி செய்யுங்கள். ஏனைய குழந்தைகளைப் போலவே தாய்ப்பாசத்தை நானும் முழுமையாய் அனுபவிக்க வேண்டும்.

எங்களுடைய தோட்டத்தில் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கின்றன அம்மா. நாங்கள் மட்டுமே அதே பழைய வீட்டில் இருக்கிறோம். டி.வி பார்ப்பதென்றால்கூட பக்கத்து வீட்டுக்குத் தான் செல்ல வேண்டும். கிழிந்த சட்டையுடன் அங்கு செல்ல எனக்கு வெட்கமாயிருக்கிறது. என்னால் முடியவில்லை அம்மா. உங்கள் மடியில் கிடந்து கண்ணீர்விட்டு இதுவரையான அத்தனை சோகங்களையும் கரைக்கவேண்டும். என்னையும் தம்பியையும் உங்களோடு அழைத்துச் சென்றிருக்கலாம்தானே?

சொல்ல மறந்துவிட்டேன். கடந்த வாரம் தம்பிக்கு கடுமையான காய்ச்சல். அப்போது உங்களது ஞாபகம் தான் எனக்கு வந்தது. எனக்கு ஓரளவு கிடைத்த தாய்ப்பாசம் கூட தம்பிக்குக் கிடைக்கவில்லையே என அழுதேன். நல்ல வேளையாக தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை செய்து குணப்படுத்தினார்கள்.

ஏன் அம்மா நீங்கள் இங்கு வருவதில்லை? நாங்கள் உயிரோடு இருப்பதை நீங்கள் மறந்துவிட்டீர்களா? இங்கு கழியும் ஒவ்வொரு நிமிடமும் முட்தூரிகையாய் மனதை குத்திக் குடைகின்றது. அடுத்த நாளை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்றுகூட தெரியாமல் வாழ்கிறோம்.

உண்மையில், வெளிநாட்டில் வசிக்கும் தாய்மாரின் குழந்தைகளெல்லாம் இப்படித்தான் நொந்து வாழ்கிறார்கள் என நினைக்கும்போது கண்ணீர் நிறைந்து மனதும் ஈரமாகிறது.

நீங்கள் இங்கு வரும்போது சிலவேளைகளில் நான் மரணித்திருக்கக்கூடும். வீட்டின் மூலைமுடுக்கெங்கும் இருக்கும் என் சுவடுகளில் உங்கள் பாதம்படும்போது என் ஆன்மா குதூகலிக்கும். ஆனாலும் நான் அழுதுத் தவித்த ஓலக்குரல்கள் அப்போதும் சுவர் இடுக்குகளில் ஒலித்து, உங்களுக்கு சாபமிடுவதாய் உணர்வீர்கள்.

இந்தக்கடிதம் உங்களைப் போய் சேராவிட்டால், தாயை தூரதேசத்துக்கு அனுப்பித் தவிக்கும் ஒவ்வொரு குழந்தையின் வேதனை மடலாகவும் ,அந்தத் தாய்மாருக்கு நான் எழுதிய கடைசி வேண்டுகோள் மடலாகவும் இது இருக்கட்டும். அம்மா என்ற ஒரு வார்த்தையில் அனைத்துமே இருக்கின்றதென்கிறார்கள். எனக்கும் அதை அனுபவிக்க சந்தர்ப்பம் ஒன்று தாருங்கள். அல்லால் சாபங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையை இப்படியே மரணத்தின் எல்லை வரை கடந்து உங்கள் அன்புக்குக் காணிக்கையாக்குகிறேன். அதில் உங்கள் உள்ளம் களிப்படையட்டும்.

விடைபெறுகிறேன் அம்மா.

இப்படிக்கு,
உங்கள் மகள்
லட்சுமி.

இனி சில தரவுகளை பார்ப்போம்.

உலகத்தில்…
*அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் 6 முதல் 11 வயதிற்குட்பட்ட 12 கோடி சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை.


* உலகம் முழுவதும் சுமார் 10 கோடி சிறுவர்கள், சிறுவர் தொழிலாளர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர்.


* தெற்காசியாவில் சுமார் 50 இலட்சம் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள்। இவர்களில் அதிகமானோர் பாலியலுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்தப்படுகிறார்கள்.


* ஆசிய கண்டத்தில் வருடந்தோறும் 5 இலட்சம் சிறுவர்கள் கடத்தப்பட்டு அடிமைத் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.


* உலகம் முழுவதும் வருடாந்தம் 12 இலட்சம் பெண்களும் சிறுவர்களும் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறார்கள்.


* ஒவ்வொரு 60 செக்கனிலும் 20 இளஞ்சிறுவர்கள் எளிதில் பாதிக்கக்கூடிய நோயினால் மரணமடைகின்றனர்.


*ஆபிரிக்காவில் ஐந்து பெண்களில் ஒருவர் புதிதாகப் பிறக்கும் குழந்தையை இழக்கிறார்.

இலங்கையில்…,
* இலங்கை சனத்தொகையில் 31 வீதமானோர் 18 வயதிற்குக் குறைந்தவர்களாவர்.


*சுமார் 40 ஆயிரம் சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை என கண்டறியப்பட்டுள்ளது.


* கொழும்பு வீதிகளில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் மற்றும் கொழும்பில் கடைகளில் தொழில்புரிவேரின் எண்ணிக்கை 2ஆயிரம் ஆகும்। கொழும்பு தவிர ஏனைய பகுதிகளில் இவ்வாறு 2500 சிறுவர்கள் இருக்கிறார்கள்.


* சுமார் 30ஆயிரம் சிறுவர்கள், சிறுவர் பராமரிப்பு நிலையங்களிலும் சிறுவர் அமைப்பு நிலையங்களிலும் வாழ்கிறார்கள்.


* யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் சிறுவர்களில் 850 பேர் பெற்றோரை (ஒருவரை அல்லது இருவரை) இழந்தவர்களாவர்.

-இராமானுஜம் நிர்ஷன்
நனறி வீரகேசரி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s