By – Affan Abdul Haleem
நிகாப் வாஜிபா?! ஹராமா?!
இது கடந்த வார இறுதியில் பெண்கள் அரபுக் கல்லூரியொன்றில் உரையாற்றச் சென்றிருந்த போது கேட்கப்பட்ட கேள்வி.
இதற்கான பதில் பெண்களின் அவ்ரத் எது என்பதற்கான பதிலாகும். முகம் மணிக்கட்டு தவிர்ந்த அனைத்துப் பகுதியும் அவ்ரத் என்பதில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது. அனைவரும் ஏற்றுக்கொண்ட மிகப் பெரிய உண்மை அது. முகத்தையும் கையையும் மூட வேண்டுமா? அவையும் அவ்ரத்தா என்பதில் தான் கருத்து வேறுபாடு இருக்கின்றது. இந்தக் கருத்து வேறுபாடு இன்று நேற்றல்ல கடந்த 14 நூற்றாண்டுகளாக இருக்கின்ற ஒன்றாகும்.
*கருத்து வேறுபாடு இருக்கின்ற ஒன்றில் ஒரு கருத்தை வாஜிப் என்று சொல்வதானது ஏனைய கருத்துக்களை ஹராம் என்று சொல்வதற்குச் சமனாகும்*. ஒருவர் இப்படிச் சொல்லலாம். கருத்து வேறுபாடுள்ள இந்த விடயத்தில் நான் இந்தக் கருத்தைத்தான் மிகப் பலமானதாகக் காணுகின்றேன். என்னைப் பொருத்தவரையில் அதனை வாஜிப் என்ற தரத்தில் வைத்தே நோக்குகின்றேன் என்று கூறினால் அது வேறு கதை. ஆனால் இதுதான் வாஜிப் இதுவே இறுதியான முடிவு என்று கூறினால் அது மிகப் பாரதூரமான வார்த்தையாகும்.
இமாம் ஷாபிஈ அவர்கள் சொன்னது போல *’எனது கருத்து சரியானது, ஆனால் பிழையாக இருக்க வாய்ப்புண்டு, அடுத்தவர்களின் கருத்து பிழையானது ஆனால் சரியாக இருக்க வாய்ப்புண்டு’* என்று சொல்வது அறிவு பூர்வமானது, பண்பாடானது, நாகரிகமானது. ஆனால் தான் சரியென்று நினைக்கும் கருத்தை வாஜிபாக்கும் அதிகாரம் உலகில் எந்தப் பெரிய அல்லாமாவுக்கும் கிடையாது.
*கருத்து வேறுபாடுள்ள ஒரு விடயத்தில் ஒரு மனிதன் தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக சொல்ல முடியுமான அதி உச்ச பட்ச எல்லை அதுதான். ஷாபிஈ மத்ஹபிலிருந்து ஒவ்வொருவரும் படித்துக் கொள்ள வேண்டிய முதல் பாடமது.*
கருத்துவேறுபாடுள்ள ஒரு விடயத்தில் எந்த ஒரு கருத்துக்கும் ‘பல கருத்தில் ஒரு கருத்து’ என்பதை விடக் கூடிய அந்தஸ்து வழங்கப்பட முடியாது. ஒரு கருத்துக்கு புனிதத்துவத்தை வழங்க முடியாது. மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் மட்டரகமாக விமர்சிக்கப்பட முடியாது. *‘’இந்தக் கப்ரின் சொந்தக் காரரைத் தவிர எம்மில் யாருடைய கருத்தும் ஏற்றுக் கொள்ளப்படவும் முடியும், மறுக்கப்படவும் முடியும்’’* என்று நபியவர்களின் மண்ணறையைச் சுட்டிக் காட்டி இமாம் மாலிக் அவர்கள் சொன்ன கருத்தை நாமனைவரும் தெளிவாகப் புரிந்திருக்க வேண்டும்.
இமாம் அபூ ஹனீஃபாவிடம் ஒரு தடவை ”இமாமவர்களே உங்களது இந்தக் கருத்துத்தான் எவ்வித அசத்தியமும் கலக்காத தெளிவான சத்தியமா?” என்று கேட்கப்பட்ட போது இமாமவர்கள் *”சிலவேளை அது எவ்வித சத்தியமும் கலக்காத தெளிவான அசத்தியமாகக் கூட இருக்கலாம்’’* என்று கூறினார்கள். அறிவின் பாரம் நிறைந்து பண்பினால் பூமியை நோக்கித் தாழ்ந்திருந்த எமது பாரம்பரியத்தின் ஓர் அடையாளமிது.
பெண்களது அவ்ரத்தைப் பொருத்தவரையில் முகம் மற்றும் மணிக்கட்டு வரையிலான கை தவிர்ந்த அனைத்தும் அவ்ரத் என்பதில் உம்மத் ஒன்றுபட்டிருக்கின்றது. எந்த மத்ஹபும், எந்த இயக்கமும், எந்தக் குழுவும் இதில் முரண்படவில்லை.
ஆண்களின் அவ்ரத் எது என்று கேட்டால் தொப்புளிலிருந்து முழங்கால் வரையில் என்று அனைவரும் இலகுவாகச் சொல்லி விடுவார்கள். ஒரு த்ரீக்வாட்டர் அல்லது ஒரு டவல் ஆணின் அவ்ரத்தை மறைத்துக் கொள்வதற்குப் போதுமானது. ஆனால் பெரும்பாலும் எல்லா ஆண்களுமே தமது அவ்ரத்தை விட அதிகமான பகுதிகளை மறைத்துக் கொண்டே செல்கின்றார்கள்.
*அதே போன்று ஒரு பெண் தனிப்பட்ட ரீதியில் தனது அவ்ரத்தை விட அதிகமான பகுதிகளை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று ஏதோ சில காரணங்களுக்காக விரும்பினால் அவ்வாறு செய்துகொள்ள அவளுக்கு பூரண சுதந்திரம் இருக்கின்றது. ஆனால் பிரச்சினை எங்கு வருகின்றதென்றால் அப்படியான தனிப்பட்ட சுதந்திரத்தை வாஜிப் என்ற நிலைக்குக் கொண்டு வருகின்ற போதுதான்.*
வாஜிப் என்றால் கட்டாயக் கடமை, ஒன்று வாஜிபாக இருக்கும் போது அதனோடு சம்பந்தப்பட்ட கருத்துவேறுபாடுள்ள ஏனைய கருத்துக்கள் ஹராம் என்ற தரத்துக்குப் போய்விடுகின்றன. வாஜிபை விடுவது பெரும் பாவமாகும், வாஜிபைப் புறக்கணிப்பது நரகத்துக்கு இட்டுச் செல்லக்கூடியதாகும். ஒரு வாஜிப் ஃபத்வா இவ்வளவு விளக்கத்தையும் உள்ளடக்கியிருக்கின்றது.
அடுத்த முக்கியமான கேள்விதான் வாஜிப் என்பதற்குரிய கத்இய்யத்தான ஆதாரம் எங்கே என்பதாகும். ழன்னிய்யாத்துகளை வைத்து யாரையும் சுவனத்துக்கோ நரகத்துக்கோ அனுப்ப முடியாது.
இன்று பெண்களின் முகத்துக்கு வந்திருக்கும் இந்த சோதனை கொஞ்ச காலத்துக்கு முன்னர் ஆண்களின் தலைக்கு வந்திருந்தது. தலைப்பாகை பற்றிய வாதப்பிரதிவாதங்களே அவை. லுங்கியை அவிழ்த்தாவது தலைப்பா அணிவித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் என்பது போலிருந்தது அன்றைய தீவிரம்.
இன்றைய தீவிரம் எப்படிப் போயிருக்கின்றதென்றால்
சமூகத்தில் அடிப்படை அவ்ரத்தைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்கின்ற பெருந்தொகையானோரைப் பற்றிய கரசனையே இல்லாமல், முகத்தைத் திறந்து பார்வையைத் தாழ்த்திக் கொண்டு செல்வோரின் முகத்துக்கு ஒரு கதவு போட்டு விட வேண்டுமன்ற அளவுக்குப் போயிருக்கின்றது.
*இந்தத் தீவிரம் எல்லாப் பெண்களையும் நிகாப்தாரிகளாக்கி விடும் என்று இவர்கள் நினைத்தால் அது சுத்த முட்டாள்தனம். ஏனெனில் தீவிரங்கள் எப்போதும் மார்க்கத்தை விட்டு மனிதர்களைத் தூரப்படுத்துகின்ற வேலையையே செய்து வந்திருக்கின்றன.*
மூட வேண்டும் என்பதில் ஒரு கூட்டம் எல்லை மீறும் போது அதன் விளைவாக திறப்பதில் இன்னுமொரு கூட்டம் எல்லை மீறும்.
*கருத்து வேறுபாடுள்ள ஒன்றில் ஒரு கருத்தை ஒரு கூட்டம் வாஜிபாக்கும் போது இன்னொரு கூட்டம் அதனை ஹராமாக்கும்.*
எப்படி கீரைக் கடைக்கு எதிர்க்கடை உண்டோ அவ்வாறே ஃபத்வாக் கடைக்கும் எதிர்க்கடை வரும். நீ வாஜிபென்றால் நான் ஹராமென்பேன், நீ ஹராமென்றால் நான் வாஜிபென்பேன் என்று மல்லுக்கு நிற்பார்கள்.
*நிகாப் வாஜிபென்று வெளியிடப்பட்ட ஃபத்வா மிகவும் பாரதூரமானது.*
(كبرت كلمة خرجت من فيه)
நோன்பு ஃபத்வாவும், பெருநாள் ஃபத்வாவும் மங்கிப் போனது போல் இது மங்கிப் போகாது. ஏனெனில் மக்கள் எல்லா நாளும் நோன்பு பிடித்து பெருநாள் கொண்டாடுவதில்லை, ஆனால் பெண்கள் எல்லா நாளும் ஹிஜாப் அணிகின்றார்கள்.
உங்களுடைய மார்க்கத்தில் நீங்கள் எல்லை மீறிச் சென்று விடாதீர்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான். தஃப்ரீத் மற்றும் இஃப்ராத் என்ற இரண்டு தீவிரங்களுக்கு நடுவில் அகப்பட்டுக் கொண்டு இன்று உம்மத் அல்லாடிக் கொண்டிருக்கின்றது. அந்தத் தீவிரங்களிலிருந்து உம்மத்தைக் காப்பாற்றி நடுநிலையின் பக்கம் அழைத்து வர வேண்டிய ஆலிம்கள் ஒரு பக்கத் தீவிரத்துக்கு இன்னும் எண்ணையூற்றுகின்ற வேலையைச் செய்யக் கூடாது. அது உம்மத்தின் வரலாற்றில் மிகப் பெரும் அநீதியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
நீண்டு விட்டதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இறுதியாய் இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்களுடைய ஒரு கருத்தைக் கூறி முடித்துக் கொள்கிறேன்.
ஒரு முஃப்தி (ஃபத்வாவை வழங்குபவர்) ஒரு ஃபத்வாவை வழங்குகிறார் எனில் அவர் அல்லாஹ்வின் சார்பில் கையெழுத்துப் போடுகின்றார் என்பதே அர்த்தமாகும். தன்னுடைய மிகப் பிரபலமான புத்தகமான இஃலாமுல் முவக்கிஈன் அன் ரப்பில் ஆலமீனில் இமாமவர்கள் கேட்கின்றார்கள்… *சாதாரணமாக மன்னர்கள் சார்பாக கையெழுத்துப் போடும் பதவிகளில் இருப்பவர்களே எவ்வளவு தூரம் உயர்ந்த பொறுப்புள்ளவர்களாகக் கருதப்படுகின்றார்களென்றால் வானங்கள் மற்றும் பூமியின் இரட்சகனான அல்லாஹ்வின் சார்பாகக் கையெழுத்துப் போடும் பதவிகளில் இருப்பவர்கள் எந்தளவு பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்?!*
எவ்வளவு பயங்கரமான கேள்வி?!
By – Affan Abdul Haleem
2016/10/08